💲💲💲மதுரை கல்வி மாவட்டங்களில் துப்பரவு, வாட்ச்மேன் பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக மதுரை முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் வாட்ச்மேன், துப்பரவு பணியாளர் நியமனத்திற்கு வேலைவாய்ப்பு அலுவலகம் 2012ல் தகுதியானவர்களை பரிந்துரைத்தது. இதில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான கணேசன் உட்பட பலர் விண்ணப்பித்தனர். நேர்காணலுக்கும் அழைக்கப்பட்டு பலர் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கூடுதல் தகுதி இருந்தும் தனக்கு பணிநியமனம் வழங்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கணேசன் வழக்கு தொடர்ந்தார்.
💲💲💲விசாரணையில் எம்.எல்.ஏ.,க்கள், கல்வி அதிகாரிகள் பரிந்துரைப்படி 16 பேர் பணிநியமனம் செய்யப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து விசாரிக்க லஞ்சஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. எஸ்.பி., தலைமையில் நடந்த விசாரணையில் 2011-12ல் திருமங்கலம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு உட்பட்ட கல்வி மாவட்டங்களில் முறைகேடு நடந்தது உறுதியானது.
இதைதொடர்ந்து அப்போதைய எம்.எல்.ஏ.,க்கள் ஏ.கே.போஸ் (திருப்பரங்குன்றம்), முத்துராமலிங்கம் (திருமங்கலம்), கதிரவன் (உசிலம்பட்டி) மற்றும் உசிலம்பட்டி கல்வி மாவட்ட முன்னாள் அதிகாரி சாந்தமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி நாகராஜமுருகன் (தற்போது கல்வித்துறை இணை இயக்குனர்), கல்வித்துறை இயக்குனர்கள் மணி, தேவராஜன், இணை இயக்குனர்கள் ராஜேஸ்வரி, கண்ணப்பன் ஆகியோர் மீது லஞ்சஒழிப்புத்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி., குமரகுருபரன் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
