அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனியாக டியூஷன் நடத்தினால் அவர்களுக்கு நல்லாசிரியர் விருது என்னும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடையாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது, ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் சிறந்த சேவை செய்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் வெள்ளிப் பதக்கம், ரொக்கம் ₹10 ஆயிரம், நற்சான்று பத்திரம் ஆகியவை வழங்கப்படுகிறது.
இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் மாவட்ட வாரியாக சிறந்த ஆசிரியர்கள், கல்விக்காக சேவை செய்த ஆசிரியர்கள் தேர்வு செய்து அவர்களில் இருந்து சிறந்த நபர்கள் தனியாக பிரித்து விருது வழங்கும் பட்டியல் தயாரிக்கப்படுவது வழக்கம். விருதுக்காக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டங்களில் இருந்து சிறந்த ஆசிரியர்களை பரிந்துரை செய்ய வேண்டும்.
அதன்படி, இந்த ஆண்டில் ஆசிரியர் தின விழாவில் மேற்கண்ட விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக 2018-19ம் கல்வி ஆண்டில் பணியாற்றிய ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
நல்லாசிரியர்கள் பட்டியல் தயாரிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
2018-19ம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் தின விழா செப்டம்பர் 5ம் தேதி நடக்கிறது. இதில், பள்ளிக் கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்பட்டோர் நலத்துறை மூலம் நடத்தப்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளை சேர்ந்த அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளித்து பரிந்துரை செய்ய வேண்டும்.
இப்படி பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் தங்களின் பணியில் கடமை தவறாதவராகவும், காலம் நேரம் பார்க்காமல் பணியாற்றுபவராகவும் இருக்க வேண்டும். தவறாமல் பள்ளிக்கு வந்து தன்னலமற்ற வகையில் எந்த பயனும் கருதாமல் தொண்டாற்றி மாணவர்களின் கல்வி முன்னேற்றமே பெரிதெனக் கருதி அதன் மூலம் மாணவர்கள் சேர்க்கையும், தேர்ச்சி வீதத்தையும் அதிகரிக்கச் செய்த ஆசிரியர்களை கண்டுபிடித்து பரிந்துரை செய்ய வேண்டும்.
நடத்தை விதிகளுக்கு முரணாக தனிப்பயிற்சி வகுப்புகள் (Tution) எடுத்து, கல்வியை வணிக ரீதியாக கருதி செயல்படும் ஆசிரியர்களையும், தனியார் பள்ளிகளில் நிர்வாக ரீதியாக இருக்கும் ஆசிரியர்களையும் தேர்வு செய்து மேற்கண்ட விருதுக்கு பரிந்துரை செய்யக் கூடாது. பரிந்துரைக்கப்படும் ஆசிரியர் எந்தவித ஒழுங்கீன நடவடிக்கைக்கும் குற்றச்சாட்டுக்கும் உட்படாதவராகவும், அரசியலில் ஈடுபட்டு அதன் மூலம் அரசியல் கட்சிகளுடன் தொடர்பில்லாதவர்களாகவும் ,பொது வாழ்வில் தூய்மையானவர்களாகவும், பொதுச் சேவையில் அக்கறை கொண்டவராகவும் இருக்க வேண்டும். குற்றப் பின்னணி உள்ளவர்களை தேர்வு செய்து விருதுக்கு பரிந்துரை செய்து விருது வழங்கப்பட்ட பிறகு புகார் வந்தால் பரிந்துரை செய்தவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனியாக டியூஷன் நடத்தினால் நல்லாசிரியர் விருது கிடையாது என்று பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
