13 ஆசியர்களுக்கு நோட்டீஸ்

தமிழ் மொழியை விட சமஸ்கிருதம் தொன்மையானது என்று பாடப்புத்தகத்தில் அச்சடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 13 நூல் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், பாடப்புத்தகத்தில் தவறாக அச்சிடப்பட்டது தொடர்பாக, 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நடப்பாண்டில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாட புத்தகங்களில் பல்வேறு பிழைகள் மற்றும் தேசிய கீதத்தை தவறாக அச்சிடப்பட்டது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

12ம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதமே தொன்மையான மொழி என அறிவிக்கப்பட்டதால் மீண்டும் சர்ச்சையானது.

பக்கம் எண் 142ல் மொழிகளின் தொன்மை வரலாற்றை குறித்து படமாக கொடுக்கப்பட்டுள்ளது.

அதில், கி.மு.300 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ் என்றும், கி.மு.2000 ஆண்டுகள் பழமையானது சமஸ்கிருதம் என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், மா.பா.பாண்டியராஜன் ஆகியோர், பாடப்புத்தகத்தை தயாரித்த நூல் ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இந்த நிலையில், 12ம் வகுப்பு ஆங்கில பாடநூல் ஆசிரியர்கள் மொத்தம் 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரியர் குழுவின் தலைவர் உட்பட 13 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனம் என்ற துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த 13 பேரில் 9 பேர் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிய கூடிய ஆசிரியர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரும் பாடப்புத்தகத்தில் இந்த தவறு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தங்களுடைய விளக்கங்களை அந்த துறை இயக்குனருக்கு 3 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்களின் விளக்கத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சர்ச்சைக்குரிய மொழி சம்பந்தப்பட்ட பாடப்பகுதி மாணவர்களுக்கு நடத்தப்படமாட்டாது என்றும், அந்த பகுதி முழுமையாக நீக்கப்படும் எனவும் கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Design a site like this with WordPress.com
Get started