கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான நிதியை தமிழக அரசு பயன்படுத்தவில்லை என தலைமைக் கணக்காயர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2013- 2014ம் நிதியாண்டிலிருந்து, 2017-18 நிதியாண்டு வரை தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு மூலம் மொத்தம் 10 லட்சத்து 12 ஆயிரத்து 893 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் தலைமை கணக்காயர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அந்த தொகையில் 8 லட்சத்து 91 ஆயிரத்து 821 கோடி ரூபாய் நிதிதான் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், சுமார் ஒரு லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான நிதி, தமிழக அரசின் பல்வேறு துறைகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தலைமை கணக்காயர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 5 ஆண்டுகளில் 2017-2018ம் ஆண்டு நிதியாண்டில் அதிக பட்சமாக 28 ஆயிரத்து 29 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் 37 துறைகளில் கிராமப்புற வளர்ச்சி, பள்ளிக்கல்வித்துறை, கிராம நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட துறைகள் பெருமளவில் நிதியை பயன்படுத்தவில்லை என்று தலைமை கணக்காயர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
