விரல் அசைவில் தமிழ் கற்கலாம்!: ஆசிரியையின் ‘வித்தை’

தமிழ் எழுத்துக்களை இப்படி கற்றுத்தர முடியுமா என, ஆச்சர்யப்பட வைக்கிறார், ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை குமுதா ராஜாமணி.

கைவிரல் அசைவிலே குழந்தைகளின் மனதில் தமிழ் எழுத்துகளை பசுமரத்தாணிபோல் பதித்து வரும் இவர், நல்லாசிரியர் விருது பெற்றவரும்கூட.

கொடுவாய் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி, 2014ல் ஓய்வு பெற்று சென்னையில் செட்டிலாகிவிட்டார்.

தனது, 25 வருட கற்பித்தல் அனுபவத்தில், ஆய்வில், ‘விரல் அசைவு விளையாட்டு’ எனும் மொழிப்பயிற்சியை கண்டறிந்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு கொண்டு சேர்த்து வருகிறார்.

திருப்பூரில் தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் நடந்த குழந்தைகளுக்கான, தமிழ்மொழி பயிற்சியில் இவரை சந்தித்தோம்.

அவரிடம் பேசியதில் இருந்து…பழைய ஆயக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றியபோது, 2010ல் நல்லாசிரியர் விருது கிடைத்தது. கற்றல் குறைபாடுள்ள மாணவருக்கு எப்படியெல்லாம் ஈசியாக புரிய வைக்கலாம்னு யோசிச்சபோது, இந்த ஐடியா வந்தது.

இதில், எழுத்து வடிவம், சொல், நீட்டெழுத்துகள், துணை எழுத்துகள், கொம்பு எழுத்துகள், சுழி எழுத்துகள், ஒற்றெழுத்துகள், நட்பெழுத்துகளை ஈசியாக நினைவில் வைக்கலாம்.’ழ’கரம், ‘ற’கரம், ‘ன’கரம் வரும் இடங்கள், இலக்கணம், பகுபத உறுப்புகள், சந்திப்பிழை, விகாரம், விகுதிகள், ஐகார குறுக்கம், திணை உறுப்புகள், வினை, வினைச்சொல், வினைமுற்று, அணிகளை இந்த முறையில் கற்றால் எக்காலத்துக்கும் மறக்காது.

ஒன்றரை மணி நேரத்தில், 247 தமிழ் எழுத்துகளையும், 5ம் வகுப்பு குழந்தைக்கு எளிதாக சொல்லித்தருவேன்.

இதை புத்தகமாகவும் வெளியிட்டுள்ளேன். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், அரசு பணி தேர்வுக்கு தயாராவோருக்கு இந்த புத்தகம் உதவியாக இருக்கும்.

ஆன்லைனில் எனது வீடியோ பார்த்து மொரீசியஸ், மலேசியானு பல ஊர்களிலிருந்தும் பயிற்சி எடுக்க வராங்க. வீடியோ மற்றும் ‘ஸ்கைப்’ மூலமும் கற்றுத்தருகிறேன்.

திருநங்கைகளுக்கு இந்த கற்றல் முறையை சொல்லித்தரணும்ங்கறது நீண்ட நாள் ஆசை.

இவர்கள் மூலமாக விரல் அசைவு முறை குழந்தைகளிடையே போய் சேர்வதோடு, சமுதாயத்தில் அவர்கள் மீதான பார்வை மாற வாய்ப்புண்டு.இனியும் பண்டைய வழிமுறைகள் இக்காலத்திற்கு பொருந்தாது.
.

பிரம்பைப் பிடித்துக்கொண்டு சுண்ணாம்புக் கட்டிகளை வைத்து கரும்பலகையில் கிறுக்கல்கள் போட்டு மட்டுமே பாடம் புகட்டும் சூழ்நிலைகள் கடந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.

மாணவர்களுக்கான ஈடுபாட்டை வழியத் திணிப்பதை விடுத்து அவர்களின் ஆர்வத்தை ஆய்ந்து அதனுாடே கற்றல் கற்பித்தல் மேற்கொள்ளுவதே இந்நாளின் திறமையும் கூட..!

Design a site like this with WordPress.com
Get started