ஆசிரியரிடம் ரூ.5 லட்சம் மோசடி ஒருவர் கைது; எஸ்.ஐ., மீது வழக்கு

தங்கக் காசுகள் வாங்கித் தருவதாக கூறி, ஆசிரியரிடம், 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டார்; எஸ்.எஸ்.ஐ., மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம், அஸ்தம்பட்டியைச் சேர்ந்தவர், உமாசங்கர், 34. இவர், ஜூன், 10ல், அப்போதைய போலீஸ் கமிஷனர் சங்கரிடம் அளித்த மனு:தனியார் பள்ளியில், ஆசிரியராக பணிபுரிகிறேன்.

நானும், சகோதரி ரம்யாவும், வீட்டில் டியூஷன் எடுக்கிறோம். எங்களிடம், சேலம், எஸ்.எஸ்.ஐ., ஆறுமுகம் மகன் படித்தார். ஆறுமுகத்துக்கும், எங்களுக்கும் பழக்கம் ஏற்பட்டது.மேச்சேரியைச் சேர்ந்த செந்தில்குமார் மூலம், குறைந்த விலைக்கு தங்கக்காசு வாங்கி தருவதாக, ஆறுமுகம் கூறினார். 5 லட்சம் ரூபாயுடன், ஆறுமுகம், செந்தில்குமார், என்னை, பள்ளிபாளையம் அழைத்துச் சென்றனர்.மிரட்டல்அங்கு ஒரு தனியார் ஜூவல்லரி முன், ஒருவர், ஆறுமுகத்திடம், தங்க காசுகள் இருப்பதாக கூறி, ஒரு பையை கொடுத்து, 5 லட்சம் ரூபாயை பெற்றார்.

பையை செந்தில்குமாரிடம் கொடுத்து, ஆறுமுகம், பைக்கில் சேலம் சென்றார். நாங்கள், பின்தொடர்ந்து, மற்றொரு பைக்கில் வந்தோம்.

வெப்படை அருகே, சீருடையில் இருந்த ஒரு போலீஸ்காரர், வழிமறித்து, பையை சோதிப்பது போல் பறித்துக் கொண்டார்.

இது குறித்து, மொபைல் போனில், ஆறுமுகத்திடம் தகவல் கொடுத்தேன். அங்கு வந்த ஆறுமுகத்திடம், ஸ்டேஷனில் புகார் அளிப்போம் எனக் கூறியபோது, என்னை சமாதானப்படுத்தி, சேலம் அழைத்து வந்து விட்டார்.ஜூன், 4ல், என் தாய் உஷாதேவியுடன், ஆறுமுகம் வீட்டுக்கு சென்று பணம் கேட்டபோது, எங்களை தாக்கி, பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளுவதாக மிரட்டினார்.

தங்க காசுகள் வாங்கி தருவதாக கூறி, மோசடி செய்ததோடு, தாக்குதலில் ஈடுபட்ட ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விசாரணை விசாரித்த அஸ்தம்பட்டி போலீசார், தற்போது, மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் எஸ்.எஸ்.ஐ., ஆறுமுகம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த, கருப்பண்ணன், 26, ஆகியோர் மீது வழக்குப்பதிந்தனர்.கருப்பண்ணனை நேற்று கைது செய்தனர்.

ஆறுமுகம், முன்ஜாமின் பெற்றதால், அவரிடம் விசாரணை நடக்கிறது. மேலும் இருவரிடம், விசாரிக்கின்றனர்.

Design a site like this with WordPress.com
Get started