கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 அரசு தொடக்கப்பள்ளிகள் நூலகமாக மாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறைந்த அளவு மாணவர்களைக் கொண்ட 3 அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு, நூலகமாக மாற்றப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் ஏ.கொல்லப்பட்டி கிராமத்தில் கடந்த 1990-ம் ஆண்டு கிராம மக்களின் முயற்சியால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது.

இப்பள்ளியில் ஏ.கொல்லப்பட்டி, சஜ்ஜலப்பள்ளி, அச்சமங்கலம், சீமானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 120 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். காலப்போக்கில் சுற்றுவட்டாரங்களில் தனியார் பள்ளிகள் அதிகரிப்பால், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்தது.

கடந்த 2018-19-ம் கல்வியாண்டில் 10-க்கும் குறைவான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்தனர்.இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, ஆசிரியர்கள் வீடு, வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பள்ளி சார்பில் இலவசமாக ஆட்டோ இயக்கப்படும் என தெரிவித்தும், பெற்றோர் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முன்வரவில்லை.

மாணவர்களின் எண்ணிக்கை 5-க்கு கீழாக குறைந்ததால், இப்பள்ளி கடந்த சில தினங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் அரசுப் பள்ளியில் பயில ஆர்வமாக இருந்த ஓரிரு மாணவர்களும் தனியார் பள்ளியில் சேரும் கட்டாயம் ஏற்பட்டது.

தற்போது இப்பள்ளிக் கட்டிடத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்துக்கு நாள்தோறும் 20-க்கும் மேற்பட்டவர்கள் வந்து புத்தகங்களை வாசித்துச் செல்கின்றனர்.

இப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள் வேறு அரசுப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சிஇஓ மகேஸ்வரிடம் கேட்ட போது, ”தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கை மற்றும் மாணவர்கள் இல்லாத அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு, அங்கு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் ஒன்றியம் ஏ.கொல்லப்பள்ளி, ஊத்தங்கரை ஒன்றியம் கதிரம்பட்டி, வேப்பனப்பள்ளி ஒன்றியம் எப்ரி கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

பள்ளிக் கட்டிடங்கள் நூலகத்துறை வசம் ஒப்படைக் கப்பட்டுள்ளன,” என்றார். நூலகத்துறை அலுவலர்கள் சிலரிடம் கேட்டபோது, ”மூடப்பட்டுள்ள 3 அரசுப் பள்ளிகளும் 500 புத்தகங்களைக் கொண்டு நூலகம் அமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்நூலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும்.

தற்போது, தினக்கூலி அடிப் படையில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,” என்றனர்.

Design a site like this with WordPress.com
Get started