பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தால் அவர்களுக்கு பள்ளியில் அனுமதி அளிக்கக் கூடாது என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
சாலை விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான முயற்சியின் ஒரு அங்கமாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் வரும் ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கட்டாயம் ஹெல்மட் அணிந்து மட்டுமே வாகனத்தை ஓட்டி வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விஷயத்தில் ஆசிரியர்கள் முன்னுதாரணமாக விளங்குவதன் மூலம், சமூகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தால், அவர்களுக்கு பள்ளியில் அனுமதி கொடுக்க வேண்டாம் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதோடு, பேருந்து நிறுத்தத்தில் மாணவர்கள் பாதுகாப்பான முறையில் பேருந்துகளில் ஏறிச் செல்வதை உறுதிப்படுத்த உடற்பயிற்சி ஆசிரியர்களை ஒரு மணி நேரத்திற்கு பணி அமர்த்த வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
