அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 300க்கும் மேற்பட்ட இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்த இயலாது என தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 479 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழகத்தின் முக்கிய கல்லூரி களான 4 கிண்டி வளாக கல்லூரிகளில் 300க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.
கலந்தாய்வின் போது எஞ்சிய இடங்கள் மற்றும் இந்தக் கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் மருத்துவ படிப்பிற்காகவும் மத்திய கல்வி நிறுவனங்களில் இடங்கள் பெற்றும் சென்று விட்டதால் காலியான இந்த இடங்கள் எந்த மாணவர்களுக்கும் கிடைக்காமல் வீணாக உள்ளது.
கிண்டி வளாக கல்லூரிகளில் ஆண்டு கட்டணம் குறைவு என்பதோடு ஆய்வகம், நூலகம் உள்ளிட்ட வசதிகள் சிறப்பானதாக இருக்கும் என்பதாலும், மிகச் சிறந்த பேராசிரியர்களால் கற்பிக்கப்படுவதாலும் மாணவர்கள் முதல் வாய்ப்பாக இந்தக் கல்லூரிகளை தேர்வு செய்கின்றனர்.
எனவே 300க்கும் மேற்பட்ட இடங்களை வீணாக்காமல் மற்ற மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஆனால் வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக ஜூலை 31ம் தேதிக்கு பிறகு கலந்தாய்வை நடத்த இயலாது என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக, 300க்கும் மேற்பட்ட இடங்கள் வீணாகி வரும் நிலையில் அடுத்த ஆண்டு முதலாவது இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
