மதுரை கே.புதூரில் பள்ளி வகுப்பறையிலேயே 11 ம் வகுப்பு மாணவி காலை 8 முப்பது மணியளவில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்த முயன்ற போலீசாருடன் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கே.புதூர் காந்திபுரத்தைச் சேர்ந்தவர் முத்து இவரது 16 வயது மகள் அர்ச்சனா அதே பகுதியில் உள்ள லூர்து அன்னை மேல்நிலைப்பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த ஒரு வாரமாக மாணவி பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அவர் மற்ற மாணவிகள் வருவதற்கு முன்பே காலை 8 முப்பது மணிக்கெல்லாம் பள்ளிக்கு வந்து வகுப்பறைக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் சக மாணவிகள் வந்து பார்த்தபோது அர்ச்சனா சேலையால் மின்விசிறியில் தூக்கில் தொங்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் பள்ளி முதல்வரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவியின் சடலத்தை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல முயன்றனர். அப்போது மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அங்கு வந்து பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டி, சடலத்தை எடுத்துச்செல்ல விடாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஒரு வாரம் பள்ளி செல்லாத மாணவி, இன்று வீட்டில் இருந்து வரும் போதே, தற்கொலை முடிவுடன் தனது தாயாரின் சேலையை புத்தகப்பையில் மறைத்து எடுத்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோக சம்பவத்தால் இன்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
