தேர்வு மையங்களை அதிகரிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கோரிக்கை



ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு மையங்களை அதிகரிக்க வேண்டும் என தேர்வு எழுதுபவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் 12-ம் தேதி வெளியிட்டது.

இந்த தேர்வை எழுத மொத்தம் 1 புள்ளி 85 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான ஹால்டிக்கெட் கடந்த செப்.17-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து போட்டித்தேர்வு செப்டம்பர் 27 முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு 154 தேர்வு மையங்களில் நடத்தப்பட உள்ளன

இதற்கிடையே முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முதல்முறையாக கணினி வழியாக நடைபெற உள்ளது.

இதனால் தேர்வு எழுதுபவர்கள் முன்அனுபவம் பெறுவதற்காக டிஆர்பி இணையதளத்தில் பயிற்சித் தேர்வுகள் எழுதுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தேர்வு எழுதுபவர்கள் ஆசிரியர் தேர்வு ஆணையத்துக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

அதில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை கணினி வழியாக நடத்த டிஆர்பி திட்டமிட்டுள்ளது எனவும் ஆனால், அதற்கு தேவையான வசதிகளுடன் கூடிய தேர்வு மையங்கள் குறைவாகவே உள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக தேர்வு எழுதுபவர்களின் விருப்ப மாவட்டங்களை தவிர்த்து தொலைத்தூரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

எனவே தேர்வை சிரமமின்றி எழுத உதவும் வகையில் தேர்வு மையங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Design a site like this with WordPress.com
Get started