பருவமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விடுத்துள்ள அறிக்கையில், பருவமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு சைக்கிளில் வரும் மாணவர்களுக்கு, சாலையில் இருக்கும் சகதியில் பாதுகாப்பாய் வர உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மழை நீர் ஒழுகக்கூடிய வகுப்பறைகள், திறந்தவெளிக் கிணறுகள், பள்ளங்கள், பாதிப்படைந்த சுற்றுச்சுவர் உள்ளிட்டவற்றை, மாணவர்கள் பயன்படுத்தாத வகையில் மூடி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வகுப்பறை, ஆய்வகங்கள் என்று பள்ளிகளில் அனைத்து இடங்களில் இருக்கும் Electric Switches -ஐ பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும், மின் கசிவு ஏற்படாமல் இருக்க, அறுந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பிகள், கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவற்றை உடனே அகற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மழைநீர் தேங்கியிருக்கும் பள்ளங்கள், மேற்கூரைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும், ஏரி, குளங்கள், ஆறுகளில் மாணவர்கள் குளிக்கக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடிநீரைக் காய்ச்சி குடித்தல், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், மரங்களின் கீழ் ஒதுங்கி நிற்காமல் பார்த்துக்கொள்ளுதல், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை சுத்தம் செய்தல், கட்டிடங்களின் உறுதித்தன்மையை பாதுகாத்தல் உள்ளிட்ட அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
