ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைக்கும் திட்டம் ஏதுமில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக உள்ளது.
மத்திய அரசின் மருத்துவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் ஓய்வு பெறும் வயது 65ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வேலைவாய்ப்பின்மையை சமாளிப்பதற்கு, மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைப்பதற்கு பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை முடிவெடுத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
60 வயதை அடைந்தவர்கள், 33 வருட சேவையை பூர்த்தி செய்தவர்களுக்கு ஓய்வளிக்கும் வகையில், விதிமுறையில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் வதந்தி எனக் கூறினார்.
அது போன்ற எந்த முன்மொழிவும் வழங்கப்படவில்லை என்றும் அது தேவையும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 30 வருட சேவையை பூர்த்தி செய்தவர்களுக்கும், சரியாகப் பணி செய்யாதவர்களுக்கும் 50 அல்லது 55 வயதில் கட்டாய ஓய்வளிக்கும் வகையில் ஏற்கெனவே விதிமுறை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
58ஆக இருந்த மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது, 1998ஆம் ஆண்டில் 60ஆக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
