தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள வகுப்பறைகளை சாரண, சாரணிய மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள உத்தரவிட வேண்டுமென முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்போவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், படிப்பை தாண்டி நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதாக சாரண, சாரணிய மாணவர்களை பாராட்டி பேசினார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 152 சாரண, சாரணியர் மாணவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விருது வழங்கி பாராட்டினார்
