கல்வித் தொழில்நுட்பத்தை மேம்படுத்த அரசுடன் இணைந்து செயல்பட முன்வருமாறு தனியார் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
கல்வியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம், மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் தனித்திறனை மேம்படுத்தும் நோக்கில் “NEAT” ( National Educational Alliance Technology )என்ற புதிய திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தொடங்கியுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலமாக, கற்றல் மற்றும் கற்பித்தலில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் புகுத்தி சிறப்பான கல்வியை வழங்கி வரும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது
மேலும், NEAT திட்டத்தின் கீழ் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை (MHRD ) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ( AICTE ) உடன் இணைந்து செயல்பட முன்வருமாறு தனியார் கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
விருப்பம் உள்ள தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் http://www.aicte-india.org என்ற இணையதளத்தில் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 20 வரை தங்கள் விருப்பத்தை பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணையதளத்தில் விருப்பத்தை பதிவு செய்தவுடன் விரிவான தகவல்கள் சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.
