தனியார் பொறியியல் கல்லூரிகள் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை, திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பாணையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும்,கடந்த 2018 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து பெற்ற அசல் சான்றிதழ்களை, சரிபார்ப்புக்கு பின் உடனடியாக திருப்பி ஒப்படைத்து விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது
அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பாணையை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தன் மனுவில், சான்றிதல் சரிபார்ப்புக்கு பின் அசல் சான்றிதழ்களை ஆசிரியர்களிடம் திரும்ப ஒப்படைத்தால், கல்வியாண்டின் இடையில் ஆசிரியர்கள் வேறு கல்லூரிக்கு மாறி விடக்கூடும் எனவும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் பல்கலைக் கழகத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
தொடர்ந்து இந்த வழக்கில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கவுன்சில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய சுற்றறிக்கையின் அடிப்படையிலேயே, தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.
தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த், அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த உத்தரவு என்பது அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உத்தரவுகளுக்கு எதிரானது, எனவே அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் சுற்றறிக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை தொடர்ந்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் வெளியிட்ட சுற்றறிக்கையில், தனியார் பொறியியல் கல்லூரிகள், தங்களிடம் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ராஜினாமா செய்யும் போது அவர்களது அசல் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும், அசல் சான்றிதழை தர மறுத்தால் கல்லூரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார்
அண்ணா பல்கலைக்கழகம் தனியார் கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அசல் சான்றிதழ் வைத்திருக்க கூடாது என்ற உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், அசல் சான்றிதழ் தொடர்பான அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் உத்தரவுகளை கல்லூரிகளுக்கு மீண்டும் தெரிவிக்க வேண்டும் எனவும், ஆனால் இந்த உத்தரவை கொண்டு அசல் ஆவணங்களை அளிப்பது தொடர்பாக தனியார் கல்வி நிறுவனங்கள் கருத்தில் கொள்ள கூடாது என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.
