ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில், இஸ்ரோ மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் விண்வெளி கண்காட்சியையொட்டி, கல்லூரி மாணவ மாணவிகள் 3 ஆயிரம் பேர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

கோபிச்செட்டிப்பாளையம் கரட்டடிபாளையத்தில் உள்ள கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக விண்வெளி வாரத்தையொட்டி பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம் இணைந்து இன்று முதல் மூன்று நாட்கள் இஸ்ரோ விண்வெளி கண்காட்சி நடத்தப்படுகிறது.
இது தொடர்பான விழிப்புணர்வு பேரணியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு நிலைய இயக்குநர் ராஜராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
இதில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி நிலைய பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அவர்கள் விண்வெளி மற்றும் கண்காட்சி குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்திச்சென்றனர், இதையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
