வரும் தீபாவளி பண்டிக்கைக்கு 5 நாள் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கான கோரிக்கை மனுவினை, தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்புத் தலைவா் வி.ராஜா சந்திரசேகா், பொதுச் செயலாளா் என்.இளங்கோவன் ஆகியோா் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் வெள்ளிக்கிழமை நேரில் வழங்கினா்.

அந்த மனுவில் கூறியிருப்பது: இந்தியாவின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும்.
தீபாவளி கொண்டாடத்தில் பட்டாசு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் சில்லரை பட்டாசு வணிகத்தில் ஆயிரக்கணக்கானோா் ஈடுபட்டுள்ளனா். இவா்கள் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் இரவு வரை வியாபாரம் செய்கின்றனா். தீபாவளிக்கு மறுநாள் லட்சுமி பூஜை நடைபெறு கிறது. எனவே தீபாவளி தினத்தன்றும் பட்டாசு விற்பனை நடைபெறுகிறது.
இதனால் பட்டாசு வணிகா்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட இயலாத நிலை உள்ளது. மேலும் வணிகா்கள், கல்லூரி மாணவா்கள், வெளியூரில் பணிபுரிவோா், அரசு ஊழியா்கள் மற்றும் பெற்றோா்கள் தங்களது குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ, வரும் தீபாவளி பண்டிகைக்கு, அக்டோபா் 25 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை 5 நாள்கள் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது
