இஸ்ரோவைப் போன்று சிறிய வகையில் ராக்கெட் ஏவுதலை நிகழ்த்திக் காட்டிய சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தை அடுத்த தேவனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுபவர் தினேஷ். டார்வின் அறிவியல் மன்றம் என்ற பெயரிலான அமைப்பை உருவாக்கியுள்ள இவர், அதன் மூலம் பல்வேறு விஞ்ஞானிகளைத் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்று மாணவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளித்து வருகிறார்.
அந்த வகையில் ஐந்து மாணவ – மாணவிகளை தேர்வு செய்த அவர், அந்த பகுதியில் உள்ள வெப்பநிலை மற்றும் காற்றின் ஈரப்பதம் ஆகியவற்றை கண்டறிவதை இலக்காகக் கொண்டு ஒரு ராக்கெட்டை தயாரித்து ஏவ பயிற்சி அளித்தார்.
பள்ளி மைதானத்தில் இருந்து ரிமோட் மூலம் ஏவப்பட்ட ராக்கெட் சிறிது தூரம் உயரே பறந்து சென்று தரையில் விழுந்தது. ராக்கெட்டை உருவாக்கி விண்ணில் ஏவிக்காட்டிய இளம் விஞ்ஞானிகளான அரசுப் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் மக்களின் பாராட்டைப் பெற்றனர்.
ராக்கெட் தொழில்நுட்பம் குறித்து அரசு பள்ளி மாணவ – மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர் குழுவின் ஆக்கபூர்வமான முயற்சியும் மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. முன்னதாக பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது
