பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் மானிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியை கடந்த 1949-ல் அப்போதைய மாநில அமைச்சர் கக்கன் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மக்களால் நடத்தப்படும் ஒரே பள்ளி எனும் சிறப்பை இப்பள்ளி பெற்றுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகி இப்பள்ளியை நிர்வகிப்பது வழக்கம். அதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வகுமார் என்பவர் தற்போது பள்ளி நிர்வாகியாக உள்ளார். இப்பள்ளியில் 127 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது 70 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள இப்பள்ளியை புதுப்பிக்க விரும்பிய இப்பகுதி ஆதிதிராவிடர் மக்கள், முன்னாள் மாணவர்கள், அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஆகியோர் சேர்ந்து இந்த கல்வியாண்டில் ரூ. 1.25 லட்சம் நிதி திரட்டினர். இதில், பொலிவிழுந்து காணப்பட்ட பள்ளிக் கட்டிடத்துக்கு வித்தியாசமாக வர்ணம் தீட்ட முடிவு செய்தனர் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் பள்ளியின் வகுப்பறைகளுக்கு ரயில்பெட்டிகள் போல வர்ணம் தீட்டினர்.
அத்துடன், பள்ளி வளாக சுற்றுச்சுவரில் சிறுவர்களை கவரும் வகையில் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் வரையப்பட்டுள்ளன. மேலும்,ரூ. 25 ஆயிரம் செலவில் பள்ளியில்மராமத்து பணிகளை மேற்கொண்டதுடன், விளையாட்டு மைதானத்தையும் சீரமைத்தனர். பள்ளி வகுப்பறைகள் ரயில்போல தத்ரூபமாக காட்சியளிப்பது, மாணவர்களையும், அப்பகுதி மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் முன் பொதுமக்களும், இளைஞர்களும் செல்பி எடுத்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து அப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் செல்வம் கூறும்போது, ‘‘பெரம்பலூர் மாவட்டத்துக்கு ரயில் வசதி இல்லை. இதனால், இப்பகுதி குழந்தைகளுக்கு ரயில் மிகவும் அதிசயமாகவே உள்ளது. இந்த குறையைப் போக்கும் வகையில், பள்ளிக்கு வரும் மாணவர்களை கவரும் விதமாக பள்ளி வகுப்பறைகளை ரயில் தோற்றத்தில் அமைத்தோம். இதனால், மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகின்றனர்” என்றார்.
