பிளாஸ்டிக் கழிவுகளில் அக்கறை காட்டாமல் நாம் தொடர்ந்துகொண்டிருந்தால், அடுத்த 30 ஆண்டுகளுக்குள் 12 லட்சம் கோடி கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகும் என்கிறது, உலகப் பொருளாதார மையம்.
இந்த மிகப் பெரும் அபாயத்திலிருந்து மீள்வதற்காக நம் ஒவ்வொருவரின் பங்களிப்புமே அவசியமானதாகிறது. சில ஆச்சரியகரமான முன்னெடுப்புகளைச் சில மாநிலங்கள் கையில் எடுத்திருக்கின்றன.
பிளாஸ்டிக் கட்டணம்
அசாமின் பமோஹி பகுதியில் உள்ள அக்ஷர் பள்ளியில் அங்கு படிக்கிற பிள்ளைகளுக்குக் கட்டணம் கிடையாது. அதற்குப் பதிலாக வீட்டிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்துவரச் சொல்கிறார்கள்.
பமோஹிக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் வந்த சமூக ஆர்வலர்கள் பர்மிதா சர்மா, மஸின் முக்தர் இருவரும் அங்குள்ள மக்கள் பின்பற்றிவந்த ஒரு மோசமான வழிமுறையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
குளிரைத் தாங்க முடியாத அசாம் மக்கள், பிளாஸ்டிக்கை எரித்து குளிர்காய்ந்துகொண்டிருந்ததுதான் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பிளாஸ்டிக்கை எரிப்பதால் விளையும் கெடுதலை வார்த்தைகளால் எடுத்துச்சொல்லி பெரும் மாற்றத்தைக் காண முடியாத நிலையில், செயலில் இறங்க முடிவெடுத்தனர். விளைவாக, அக்ஷர் பள்ளி தொடங்கப்பட்டது.
இங்கே பள்ளிக் கட்டணமாக பிளாஸ்டிக் கழிவுகள்தான் வசூலிக்கப்பட்டன. இதன்படி, ஒவ்வொரு வாரமும் பள்ளிக் குழந்தைகள் குறைந்தது 25 பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டுவந்து தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
சிறுவர்கள் உற்சாகத்துடன் பிளாஸ்டிக்கைக் கொண்டுவந்து தரத் தொடங்கினார்கள். இந்த பிளாஸ்டிக் கழிவுகளை சாலை அமைக்கவும், பிளாஸ்டிக் செங்கல் செய்யவும் பயன்படுத்துகிறார்கள். சிறுவர்களைக் கொண்டே பிளாஸ்டிக் அரக்கனை ஒழிக்கும் இந்த முயற்சிக்கு அங்கே நல்ல வரவேற்பு.
