
இணையதளங்களில் மணிக்கணக்கில் மூழ்கி கிடக்கும் மாணவர்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பது குறித்து மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான டெல்லி ஆணையம் (டிசிபிசிஆர்) சார்பில் பயிற்சி வழங்கப்பட்டது.
இதுகுறித்து, டிசிபிசிஆர் அதிகாரிகள் கூறியதாவது: ஆசிரியர்களுக்கான பயிற்சியை டிசிபிசிஆருடன் ‘பிளேயர்’ என்ற தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தியது. இதுதொடர்பான கருந்தரங்கில், இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகள், இணையதளத்தை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதை எப்படி உறுதி செய்வது என்பது குறித்தும், இணையதளம் பற்றி எப்படி கற்பிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இணையதளத்தில் இளம்பருவத்தினர் மற்றும் குழந்தைகள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளான தகவல் திருட்டு, இணையவழி தொடருதல், ஹேக்கிங், ஆன்லைன் பாலியல் துன்புறுத்துதல் ஆகியவை கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன. சமீபத்தில் அதிக குழந்தைகள் வீடியோ கேம்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
வீடியோ கேம் விளையாடும்போது, குழந்தைகளின் மூளை, இதுவே போதும் என்ற போதை மனநிலைக்கு வந்துவிடுகிறது. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணையதளம், வீடியோ கேமுக்கு அடிமையாக இருக்கும் மாணவர்களை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.
இணையதளத்துக்கு அடிமையாக இருக்கும் மாணவர்களை மனச்சோர்வு,நேர்மையின்மை, குற்ற உணர்வு, பதற்றம், மனநிலை மாற்றங்கள், வழக்கமான பணியில் சலிப்பு, தள்ளிப்போடுதல், முதுகுவலி, தலைவலி, தூக்கமின்மை, வறண்ட கண்கள் போன்ற அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்கலாம். இதுபோன்ற மனநிலையில் உள்ள மாணவர்கள் இணையத்தைப் பயன்படுத்தும் போது பரவச நிலையில் மகிழ்ச்சியாக இருப்பதை காண முடியும்.
இணையதளம் மற்றும் வீடியோ கேம்களுக்கு அடிமையாக இருக்கும்குழந்தைகளை மீட்கும் கடமை எல்லாருக்கும் உள்ளது. இவை எல்லாமே குழந்தைகளின் உடலுக்கும் மனதுக்கும் கேடு விளைவிப்பதாகும். எனவே, இணையதளத்துக்கு அடிமையாகி உள்ளவர்களை மீட்டெடுப்பது உட்பட பல்வேறு பயிற்சிகளை குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கடிசிபிசிஆர் முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
