பிஞ்சுகளிடத்தில் நஞ்சைப் பாய்ச்சும் 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத் திருத்தம் 2019-ன் படி பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித அடிப்படையில் இந்தக் கல்வியாண்டிலேயே 5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு நடத்த செயல்முறைகளைத் தொடங்கியிருப்பது குழந்தைகளுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வன்முறையாகவே கருதப்படுகிறது.
பொதுத் தேர்வு என்பது ஆடல் பாடல் முறை, விளையாட்டு முறைக் கல்வி, கதை வழி முறைக் கல்வி என குழந்தைநேயக் கல்விமுறைக்கு எதிராக குழந்தைகளைத் துன்புறுத்துவதாகும்.
பள்ளிகளுக்காக குழந்தைகள் இல்லாமல் குழந்தைக்காக பள்ளிகள் இருந்தால் ஆர்வத்தோடு பள்ளியினை நோக்கி குழந்தைகள் வருவார்கள். வீட்டுச் சூழல் போன்று பள்ளிச் சூழலும் அமைந்தால்தான் உண்மையான கல்வி என்று மகாத்மா காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்.
கற்றலில் இனிமை மாறி கஷ்டப்பட்டால்தான் பலன் வரும் என்றால் கல்விச் சாலைகள் எல்லாம் தொழிற்சாலைகளாக மாறும்.
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும். குறிப்பாக தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் குழந்தைகள்தான் அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வருகிறார்கள்.
பல போராட்டங்களுக்கு நடுவில்தான் ஏராளமான குழந்தைகள் பள்ளிக்கே வருகின்றனர். இந்நிலையில் சிறுவர்களுக்குப் பொதுத் தேர்வு என்பது பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சைப் பாய்ச்சும். ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தும். அரசுப் பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்படும் அபாயத்திற்குத் தள்ளப்படும். பொதுத் தேர்வுக்காகப் படிக்கும் பள்ளியினை விட்டு வேறு பள்ளிக்கு தேர்வெழுதச் சொல்வது பயத்தை ஏற்படுத்தி, மன உளைச்சலுக்கு ஆளாக்கவும் வாய்ப்புள்ளது.
எனவே கல்விச் சீர்திருத்தம் என்ற பெயரில் குழந்தைகளின் மன நலத்தைக் கெடுத்திட வேண்டாம். குழந்தைகளின் நலன் கருதி முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிரந்தரமாக 5 மற்றும் 8 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வினை ரத்து செய்ய வேண்டும்” என்று இளமாறன் தெரிவித்துள்ளார்
