பொம்மலாட்டம், ஒயிலாட்டப் பயிற்சி: குழந்தைகளாய் மாறி நடனமாடிய ஆசிரியர்கள்!

முகப்பேர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பொம்மலாட்டம், ஒயிலாட்டம், கதை வழிப் பாடம், நினைவாற்றலை அதிகரிப்பது உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் குழந்தைகளாகவே மாறி, குதூகலத்துடன் நடனமாடினர்.

Join TELEGRAM GROUP LINK

இதுகுறித்துப் பேசிய முகப்பேர் பள்ளி தலைமை ஆசிரியரும் அன்பாசிரியருமான கிருஷ்ணவேணி, ”அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலை வழிப்பயிற்சியை மாற்று ஊடக மையத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் அண்மையில் எங்கள் பள்ளியில் நிகழ்த்தினார்.

சுமார் 25 பொம்மைகள் மூலம் பொம்மலாட்டம் நடத்தப்பட்டது. ஒயிலாட்டத்தின் எளிய நடன அசைவுகள் கற்றுக் கொடுக்கப்பட்டன. அதைப் பார்த்து அனைத்து ஆசிரியர்களும் குழந்தைகளாய் மாறி நடனமாடினர்.

கட்டைக்காலில் நின்றுகொண்டு ஆடும் கட்டைக்கால் ஆட்டமும் காளீஸ்வரனால் நடத்தப்பட்டது. தன் கை வித்தைகளால் ஆசிரியர்களுக்குத் தன்னம்பிக்கை கொடுத்தார். அதேபோல மாணவர்களின் நினைவுத் திறனை அதிகரிக்கவும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

உதாரணத்துக்கு 28 மாநிலங்களின் பெயரை ஞாபகம் வைத்துக் கொள்ள முயற்சிக்கலாம். முதலில் ஒரு மாணவர் ஒரு மாநிலத்தின் பெயரைக் கூறுவார். அடுத்த மாணவர் அந்த மாநிலத்தின் பெயர் மற்றும் இன்னொரு மாநிலத்தின் பெயர் என 2 மாநிலங்களைக் கூறுவார். 3-வது மாணவர்கள் 3 மாநிலங்களின் பெயரைச் சொல்வார். இந்த முறையை திரும்பத் திரும்ப சில முறை செய்யும்போது எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள முடிகிறது.

பாடங்களைக் கதையின் வழியாகக் கற்பிப்பது, எளிமையான பாடல்கள் வழியாக கணித ஃபார்முலாக்கள் கற்றுத் தருவது, சமூக விழிப்புணர்வு நாடகங்கள் ஆகியவையும் ஆசிரியர்களிடையே நடத்தப்பட்டன.

இந்த நிகழ்வில் திண்டுக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டனர். 40 ஆசிரியர்களுக்கும் நிகழ்வை ஒருங்கிணைத்த தன்னார்வலர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு மாதமும் இதே மாதிரியான நிகழ்வை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்றார் ஆசிரியர் கிருஷ்ணவேணி.

Design a site like this with WordPress.com
Get started