பள்ளிகள் விண்ணப்பிக்காததால் 7,000 மாணவர்கள் உதவித் தொகை பெறுவதில் சிக்கல்

தேசிய கல்வி உதவித் தொகை பெற்று தர பெரும்பாலான பள்ளிகள் விண்ணப்பிக்காததால் 7 ஆயிரம் மாணவர்கள் உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டமான தேசிய வருவாய் வழி திறன் தேர்வு மூலம் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தகுதி தேர்வுகள் வைக்கப்படுகிறது.

அதில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் 6 ஆயிரத்து 695 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அந்தந்த பள்ளிகள் இணையதளத்தில் விண்ணப்பித்தால் மட்டுமே இந்த ஆண்டிற்கான உதவி தொகை மாணவர்களுக்கு கிடைக்கும். ஒரு மாதத்திற்கு முன்பே பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டும் இதுவரை,18 மாவட்டங்களில் இருந்து 357 விண்ணப்பங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்றும் இதர மாவட்டங்கள் இன்னும் இந்த பணியை தொடங்கவே இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டுகளில் இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புதுப்பித்தல் பணிகளும் குறைந்த அளவிலேயே நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே மாணவர்களுக்கு உதவி தொகை பெற்று தர பள்ளிகள் உடனடியாக மத்திய அரசின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்

Design a site like this with WordPress.com
Get started