KYC விவரத்தை புதுப்பிக்காதோரின் வங்கி கணக்கு முடங்கும் அபாயம் – மக்களே உஷார்

ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் தங்களது கே.ஒய்.சி. சுயவிவரங்களை 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதிக்குள் புதுப்பிக்கவில்லையெனில், வங்கி சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ உள்ளிட்ட அனைத்து வங்கிகளும், தங்களது வாடிக்கையாளர்களுக்கு இதுதொடர்பாக குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் அனுப்பி வருகின்றன. அதில் ஜனவரி 1ம் தேதியோ அல்லது அதற்கு முன்னதாகவோ, சுயவிவரங்களை புதுப்பிக்கும்படி கோரப்பட்டுள்ளது.

இல்லையெனில் வங்கி சேவை முடக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு வங்கி சேவை முடக்கப்பட்டால், வாடிக்கையாளரால் பணத்தை அனுப்பவோ அல்லது பணத்தை பெறவோ முடியாது.

சுயவிவரத்தை புதுப்பிக்க வாடிக்கையாளர்கள், அருகிலுள்ள கணக்கு வைத்துள்ள வங்கி கிளைக்கு சென்று அங்கு கேட்கப்படும் ஆவணங்களை அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் விரும்பும்பட்சத்தில், சுயவிவரத்தை மாற்ற விரும்பவில்லை என வங்கியின் இணையதளத்தில் உள்ள பிரத்யேக தளத்தில் பதிவிடலாம்.

வங்கியில் தனிப்பட்ட நபரால் கணக்கு தொடங்கப்படும்போது வாடிக்கையாளரிடம் இருந்து முகவரி சான்று, அடையாள சான்று, புகைப்படம் உள்ளிட்டவை பெறப்படும்.

பின்னர் குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த சான்றுகள் மீண்டும் பெறப்பட்டு, வங்கியால் விவரங்கள் புதுப்பிக்கப்படும்.

அதிக பிரச்னைக்குரிய வாடிக்கையாளரின் சுயவிவரம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், பிரச்னை குறைந்த வாடிக்கையாளரின் சுயவிவரம் 8 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், எந்த பிரச்னையும் இல்லாத சாதாரண வாடிக்கையாளரின் சுயவிவரம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் வங்கிகளால் புதுப்பிக்கப்படுகின்றன.

Design a site like this with WordPress.com
Get started